அறிவியல் தேர்வை அணுகுவது எப்படி?

அறிவியல் தேர்வை அணுகுவது எப்படி?

சிரமப்பட்டுப் படிக்க வேண்டும் என்பதைவிட, சரியாகத் திட்டமிட்டுப் படித்தாலே அறிவியல் பாடத்தில் வெற்றி பெற முடியும்.

அறிவியல் தேர்வில், தாள் ஒன்று – தாள் இரண்டு என இரண்டு தாள்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குத் தரப்படும் இந்தத் தேர்வுத் தாள்களில் மாணவர்கள் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலுள்ள பாடப்புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவியல் பாடங்களை முறையாக மீள்பார்வை செய்தாலே போதுமானது. மாணவர்களின் அறிவியல் செயற்பாங்குத் திறன்களையும், சிந்தனைத் திறன்களையும் முழுமையாகச் சோதிப்பதற்காகவே கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பாடப் புத்தகங்களைத் தவிர்த்து சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களையும் புரட்டிப் பார்க்க வேண்டும். கடந்த ஆண்டுக் கேள்வி தாள்களையும் மாதிரி வினாத் தாள்களையும் சேகரித்துப் பயிற்சி செய்வது அவசியமாகும். மாணவர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் காணக்கூடிய நடப்பு நிகழ்வுகள் பற்றிய வினாக்களுக்கு முக்கியம் தரப்படுவதை அந்தப் பயிற்சியில் உணர முடியும்.

தாள் ஒன்றில் தரப்படும் 40 வினாக்கள் , மாணவர்கள் ஆண்டு மூன்று தொடங்கி ஆண்டு 6 வரை கற்றுக்கொண்ட 5 பாடப்பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை மாணவர்கள் உணர வேண்டும். அவை முறையே உயிரினங்களின் வாழ்க்கைச் செயற்பாங்குகள், பொருள்களின் தன்மைகள், உந்து விசை மற்றும் சக்தி தொடர்பான கோட்பாடுகள், பூமி மற்றும் விண்வெளி தொடர்பான தகவல்கள், பசுமைத் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளன.

தாள் இரண்டில் தரப்படும் கேள்விகள் – அறிவியல் கூற்றுகள் மற்றும் அறிவியல் செயற்பாங்கு, உயர்சிந்தனைத் திறன் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. ஒவ்வொரு கேள்விக்கும் அறிவியல் பாடத்தில் பல்வேறு செயற்பாங்குத் திறன்கள் தொடர்புப்படுத்தப்பட்டிருப்பதை உள்ளடக்கியுள்ளதை மாணவர்களும் பெற்றோர்களும் அறிந்திருத்தல் அவசியம். அவை முறையே அறிவியல் செயற்பாங்குத் திறன்கள், அறிவியல் கைவினைத்திறன்கள் மற்றும் உயர்சிந்தனைத் திறன்கள் ஆகும்.

அறிவியல் தேர்வுக்குத் தங்களைத் தயார் செய்யும் மாணவர்கள், தேர்வில் வினவப்படும் கேள்விகளின் மாதிரிகளைக் கண்டறிந்து அவற்றுக்கேற்பத் தயார் செய்தல் அவசியம். இதன் வழி காலத்தையும் நேரத்தையும், சக்தியையும் விரயப்படுத்தாமல் சிறந்த முறையில் தேர்வுக்குத் தயாராக முடியும்.

கேள்விகளில் தரப்பட்டிருக்கும் கட்டளைச் சொல் என்ன என்பதை முதலில் கோடிட்டுக் கொள்ள வேண்டும். கட்டளைச் சொல்லை ஆராய்ந்து அதற்கேற்ற விடையை தருவது மாணவர்களின் தலையாய பணியாகும். கட்டளைக்கு ஏற்ப விடையளிப்பதன் மூலம் சிறந்த புள்ளிகளைப் பெற முடியும். உதாரணத்திற்கு, இணைத்தல் தொடர்பான கேள்வியில் ஒரு தகவலுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் இருக்கும் அல்லது இருக்கலாம் என்பதைப் பகுத்தாய்வது அவசியம். 

Share this post

Leave a Reply