சிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் முரசு. நெடுமாறன்

சிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் முரசு. நெடுமாறன்

சுயசரிதை

பெயர்:   முனைவர் முரசு. நெடுமாறன்

பிறந்த இடம்: கேரித் தீவு, கோல கிள்ளான்

பிறந்த தேதி: 14 ஜனவரி 1937

கல்வி: தொடக்கக் கல்வி கேரித்தீவு தமிழ்ப்பள்ளியில் தொடக்கியது. ஆசிரியர் ஆயத்தத் தேர்வுக்குப் பின் சொந்த முயற்சியால் 5 ஆம் படிவம் வரை தொடர்ந்தேன்.

1963 இல் தற்காலிகத் தமிழாசிரியரானேன்; ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் நிலைத்தேன்.முன்பே சென்னை மாணவர் மன்றத் தமிழ் மணிப்பட்டயம் பெற்றிருந்தேன். மதுரைக் காமராசர் பல்கலை அஞ்சல் வழிக் கல்வித் துறையில் சேர்ந்து, இளங்கலை இலக்கியம் (B.Lit) முதுகலை (M.A.) பட்டங்கள் பெற்றேன். புதுவைப் பல்கலைக்கழகத்தில் மலேசியத் தமிழ்க் கவிதைகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன்.

பிறபணிகள்: இடைநிலைப்பள்ளிகளில் பல ஆண்டுகள் தாய்மொழி வகுப்புடன் இலக்கியமும் கற்பித்தேன். 30 ஆண்டுகளுக்கு மேல் தேர்வெழுதும் உயர்நிலை மாணவர்களுக்கு இலவயமாகக் கற்பித்துள்ளேன். பயிலரங்குகள் நடத்தியுள்ளேன். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகை தரு பேராசிரியராய் ஓராண்டு பணியாற்றினேன். 25க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளேன். ‘சிடேக்’ திட்டத்தின்வழி நாடுதழுவிய நிலையில் 10 மையங்களில் 1000 ஆசிரியர்களுக்குக் கற்றல் கற்பித்தல் பயிற்சியளித்துள்ளேன்.

விருதுகள் : தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது (1997) ஓய்வுபெற்ற தமிழாசிரியர் சங்கத்தின் நல்லாசிரியர் (Tokoh guru), சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் சாரங்கபாணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகள். 

கருத்துகள்

மாணவர்கள்

தேர்வு நோக்கத்திற்காகக் கற்கிறோம் என்பதை மறந்து, அறிவாற்றல் பெறக் கற்கிறோம் என்னும் உணர்வுடன் கற்க முயன்றால் சிறக்கலாம், தேர்விலும்  வெல்லலாம்.

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக, நிறைய நூல்களைப் படிக்க வேண்டும். சூழலுக்கேற்பப் பாடங்களை உருவாக்கிக் கற்பிக்க வேண்டும். மாணவரைப் பொதுநூல்கள் படிக்கத்தூண்ட வேண்டும்.

பெற்றோர்கள்

பிள்ளைகளின் கல்வியை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வர் என்னும் போக்கை மாற்றி, அவர்கள் நலனில் கண்ணும் கருத்துமாகச் செயல்படவேண்டும்.

ஆலோசனைகள்:

கற்றல் கற்பித்தல்

கற்றல் கற்பித்தல் ஞாபகத் தன்மையொடு, சிந்தனையைத் தூண்டும் முறையில் கற்பித்தல், அதன்மூலம் மாணவர் புதியன சிந்திக்கச் செய்தல்.

கல்விக் கொள்கை

திறமையான மாணவரைத் தனியே பிரித்து அவர்கள் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறவிருக்கும் நோக்கில் கற்பித்து மற்ற மாணவர்களைப் புறக்கணித்தல் கூடாது. எல்லா மாணவர்க்கும் கல்விதரும் முறை வேண்டும். பள்ளிக்குச் சிறப்புப் புள்ளிகள் பெற மட்டும் எண்ணாமல் நாடி வரும் மாணவர் நலமடைய வேண்டுமென்னும் நோக்கமே சிறந்த நோக்கமாகும். தொடக்கப்பள்ளியில் போடப்பெறும் அடிப்படைகள் இடைநிலை, உயர்நிலை, பல்கலை நிலையில் துலங்க வழிவகை காண வேண்டும். தனிப்பாடத்தை விட்டால் தேர்ச்சிக்கு வழியில்லை என்னும் நிலை மாறவேண்டும். பள்ளி என்பது தேர்வெழுதும் மையமே என்னும் நிலைமாற வேண்டும். ஏழை மாணவர்களுக்கும் கல்வி கிட்டச் செய்ய வேண்டும்.

Share this post

Leave a Reply