உணர்வு சார் நுண்ணறிவு
ஒரு உண்மைக் கதை சொல்கிறேன். என்னிடம் விமலா, கமலா என்ற இரண்டு இளம் பெண்கள் வேலைக்குச் சேர்ந்தார்கள். விமலா சுமாராகப் படித்த பெண். அடக்கமான, ஒழுக்கமான பெண். வாழக்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கயுள்ளவள். தந்தை இல்லை. ஏழைத் தாயின் மீதும் தம்பிகள் மீதும் பாசமிகுந்தவள். கமலா நன்றாகப் படித்தவள். ‘A’ கள் பல பெற்றவள். தான் என்ற கர்வம் அதிகம் உணர்ச்சி வயப்படுவாள்.
தவறுகளை ஏற்றுக் கொள்ளமாட்டாள். இருவரையுமே பகுதி நேர படிப்பில் சேர்த்து விட்டேன். விமலா கடுமையாக உழைத்தாள்; படித்தாள். முன்னேற வேண்டும் எனும் முனைப்பும் குடும்பம் சார்ந்த கவலையும் அவளுக்கு இருந்தது.
கமலா, சரியாகப் படிக்கவில்லை. ஆண் நண்பர்கள் அதிகம். உல்லாசமாக வாழ வேண்டும் என்ற ஆசைதான் அதிகமிருந்தது. தன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாள். வேலையை விட்டுத் தொடர்பற்றுப் போனாள்.
விமலா ஓரிண்டு முறை தேர்வில் தோல்வியுற்றாலும் தொடர்ந்து படித்து வந்தாள். விடாமுயற்சி அவளது பலம். பட்டம் பெற்றாள். விரிவுரையாளராக நியமிக்கப்பட்டாள். பட்டம் பெற்று மேற்படிப்பு கற்றாள். ஒரு வழக்குரைஞரை திருமணம் செய்து கொண்டாள். இன்று சீரும் சிறப்பாக இருக்கின்றாள்.
காணாமல்போன கமலா பல ஆண்டுகள் கழித்து இரண்டு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தாள். ஏற்கெனவே திருமணமான ஒருவர் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து தற்பொழுது தன்னைவிட்டு விலகிவிட்டார் என அழுதாள்.
இந்த இருவருக்கும் வாழக்கை இவ்வாறு அமைந்ததற்குக் காரணம் என்ன என்று நினைக்கின்றீர்கள். ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம்.
“உணர்வுச்சார் நுண்ணறிவு”
பிரார்த்தனை செய்வது கடவுளின் அருகில் செல்வதற்கு.
சேவை செய் கடவுள் உன்னருகில் வருவார்.

அறிவார்ந்த மனிதர்களே உலகின் வெற்றியாளர்கள் என எண்ணியிருந்த மனிதர்களின் மனத்தை Daniel Goleman திருப்பிப் போட்டார். தம்முடன் பள்ளியில் படித்த, எல்லாப் பாடங்களிலும் ‘A’ பெற்ற சக மாணவர்களை இருபது ஆண்டுகள் கழித்து எங்கே, என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு நடத்திப் பார்த்தார். வியப்படைந்தார். அதில் பலர் சுமாரான வாழ்க்கையில் சுமாரான வருமானத்திலும் தம்மோடு பள்ளியில் படித்தவர்களில் சுமாராகப் படித்த பையன்கள் பின் நாள்களில் சிறப்பான கல்வி கற்று வாழ்வின் மேல் தட்டுகளில் உயர்வான மனிதர்களாகத் திகழ்வதைக் கண்டடைந்தார்.
கல்வி கற்பதில் தேர்ச்சி அடைய நுண்ணறிவு போதுமானது. வாழ்வில் மேன்மையான நிலையடைய அது போதுமானது இல்லை என்றால் வேறு என்ன அதற்குத் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுந்தது.
விமலாவிடமிருந்தது “உணர்வு சார் நுண்ணறிவு”
கமலாவிடம் இல்லாமல் போனதும் அதுதான்.
தன்னையறிதல் தன் உணர்வு நிலைப் பற்றிய பிரக்ஞை; விழிப்புணர்வு (Self awareness), தறிகட்டுத் திரியும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல், தன் பலவீனங்களை அறிந்து அதினின்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல் (Self Regulation), தன் எதிர்காலம் குறித்த சிந்தனை, முனைப்பு, உழைப்பு, கனவு இருத்தல். அதனை நோக்கிய முன்னெடுப்பு (motivation), பிறர் துயர் கண்டு மனமிரங்குதல். அடுத்தவர் கஷ்டங்களைத் தமதாக எண்ணி அவற்றை நீக்கும் பொருட்டுச் சிந்திப்பது (Empathy). இவர்களைத்தான் “உணர்வு சார் நுண்ணறிவு” கொண்டவர்கள் என்பது.
சினமடக்குதல், பிரச்சினைக்குத் தீர்வு தேடல், பண்புள்ள மனிதனாக, பிறரிடம் எளிமையாகப் பழகும் பாங்கு, புரிந்துணர்வு, அன்பை வழங்கவும் பெறவுமான உறவுகளை வளர்த்தெடுப்பது போன்ற மகிழ்ச்சியான சமூக வாழ்விறகான திறன்களை வளர்த்தெடுத்துக் கொள்வது (Social Skills).
டாக்டர் மா. சண்முக சிவா
மருத்துவர் ; மனநோய் ஆலோசகர்; குடும்ப நல வைத்தியர்; சிறந்த எழுத்தாளர்; கவிஞர்.