நூல் விமர்சனம்: கல்வியும் சிந்தனையும்

நூல் விமர்சனம்: கல்வியும் சிந்தனையும்

‘கல்வியும் சிந்தனையும்’ எனும் இந்நூல் முன்னாள் விரிவுரையாளர் திரு.கு.நாராயணசாமி அவர்களால் எழுதப்பட்டது.

தமிழ்க் கூறு நல்லுலகில் இந்நூல் ஓர் அரிய முயற்சியாகும். 8 தொகுதிகளை 8 சிந்தனைகளாக வெளிக்கொணர்ந்துள்ளார். கல்வியும் சிந்தனையும், சிந்தனை கோட்பாடுகளும், சிந்திக்க கற்பித்தல், வினாக்களும்- வட்டங்களும், சிந்தனையைக் கற்பித்தல், சிந்தனையைக் கற்பித்தலில் வரிப்படக் கருவி, சிந்தனைக் கற்பித்தலின் கூறுகள், சிந்தனை கற்பித்தலில் சிந்தனை மீட்சி மற்றும் சிந்தனையைக் கற்பித்தல் : அணுகுமுறைகளும் முறைமைகளும் ஆகும். இந்த நூல் சிந்தனைத் திறன் தொடர்பான ஒட்டு மொத்த பார்வையை நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

சிந்திப்பதுவும் சிந்தனையும் பிறப்போடு வருவதாக இருப்பினும் திறமிகு சிந்தனையைக் கற்க இயலும், கற்பிக்க இயலும் என்று நூலாசிரியர் நிறுவுகிறார். சிந்தனைத் தொடர்பான மேலை நாட்டுக்கோட்பாடுகளை அதிகம் எடுத்தாளும் நாம் நமது சமயத்திலும், இலக்கியத்திலும் இலக்கண நூல்களிலும் கூறப்பட்டுள்ள சிந்தனைத் தொடர்பான கருத்துருவாக்கங்களை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிந்தனைத் தொடர்பான கருதுகோள்கள், கருத்துருவாக்கம் மேலை நாட்டு அறிஞர்களோடு ஒப்பிடுகையில் தமிழர் சார்ந்த சிந்தனைக் கோட்பாடுகள் சற்று மாறுபட்டும் மேலதிகத் தெளிவாகவும் இருக்கின்றன எனக் கருத்துரைக்கிறார். பொதுவாக மேலை நாட்டு அறிஞர்களின் கோட்பாட்டில் மனம், அறிவு, சிந்தனை, மூளை ஆகியவை இன்னும் சற்று மயக்க நிலையிலேயே இருந்து வருகின்றன. ஆனால், நமது இலக்கியங்கள் துணை கொண்டும், சமய கோட்பாடுகள்/எடுத்துக்காட்டுகள் கொண்டும் மனம், அறிவு, சிந்தனை, மூளை ஆகியவற்றை மிகவும் தெளிவாக, பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

தொடர்ந்து, சிந்தனைத் திறன் தொடர்பான கருத்துருவங்களில் நரம்பியல்சார் கல்வியியல், நினைவாற்றல், தொடர்பான சிந்தனைகள் இடம்பெறா. ஆனால், நூலாசிரியர் இந்நூலில் சிந்தனைக்கும் நரம்பியல்சார் கல்வியியல் சிந்தனைகளையும் விளக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பும், நினைவாற்றல் குறைபாடுகள் ஏற்படுவதற்கான காரணங்களையும் வெளிக்கொணர்ந்துள்ளார். அச்சஉணர்வு, மன உளைச்சல், மனக்கவலை ஆகிய உணர்வுகள் நினைவாற்றலைப்பாதிக்கும் என்றும் இந்தச் சிக்கல்களைக் களைய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற பரிந்துரைகளையும் நூலாசிரியர்முன்வைத்துள்ளார். அடுத்து, வினாவழி சிந்தனைத் திறன் எனும் தொகுதியில்தமிழர்களின் வாழ்வியல், இலக்கியங்களில், இலக்கணத்தில் பயன்படுத்தப்பட்ட; பயன்படுத்தப்பட்டு வரும் வினாக்கள் எவ்வாறு சிந்தனையைத் தூண்டுகிறது என்று எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

மேலும், இன்றைய கல்வி உலகிற்கும் குறிப்பாக ஆசிரியர் பெருமக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் 21- ஆம் நூற்றாண்டுக் கற்றல் கற்பித்தல் திறன்களில் ஒன்றான ஐ – திங்க் அதாவது சிந்தனைக் கற்பித்தலில் வரிப்படக்கருவிகள் எந்தளவு முக்கியத்துவம் வகிக்கின்றன என்று பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்\கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் முக்கியக்கூறாக அமைவது சிந்தனை மீட்சி. இந்தச் சிந்தனை மீட்சி செய்வதன் அவசியம் ஆசிரியர்கள் அறிந்து வைத்திருப்பினும் சிந்தனையைக் கற்பித்தலில் சிந்தனை மீட்சியின் அவசியமும், கற்பிக்கும் முறைமைகளையும் ஆழமாகவே இந்நூலில் புனைந்துள்ளார். இது சிந்தனை மீட்சி தொடர்பாக 9 நடவடிக்கைகளையும், அதன் பயன்பாடுகளையும் தெளிவுபடுத்தியுள்ளார். இதனோடு சிந்தனைத் திறனை அடிப்படையாகக் கொண்டதால் பாடத்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற மாதிரி ஒன்றையும் நூலாசிரியர் வழங்கியுள்ளார். இந்நூலின் இறுதி பாகத்தில் கணிமச் சிந்தனைப் பற்றியும் இந்த நூற்றாண்டுக்குத் தேவையான அத்தியாவசிய சிந்தனையுமான கணிமச் சிந்தனையையும் இந்நூலில் அறிமுகம் செய்திருக்கின்றார். இவ்வகைச் சிந்தனை மனித வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு களைய உதவுகின்றது என்பதனையும் சிறப்பாகக் கூறியுள்ளார்.

ஆக, மொத்தத்தில் இந்நூல் தமிழ் கூறு நல்லுலகுக்கு சிந்தனைத் திறனை அறிமுகப்படுத்தும்; அடையாளப்படுத்தும் ஒரு நூலாக இருக்கும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை. மேலும் 21-ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறனுக்கு உகந்த நூலாகவும் நாம் இதனைக் கொள்ளலாம். ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியர் துறையைச் சாராத தமிழ் ஆர்வளர்களுக்கும் இந்நூல் பயனாக இருக்கும் என்பதனை வாசகர்கள் படித்து அறிவர்.

முனைவர் செல்வஜோதி இராமலிங்கம்

மலாயாப் பல்கலைக்கழக மொழி & மொழியியல் புலத்தில் சமுதாய மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பாட உதவி இயக்குநர்.

Share this post

Leave a Reply