மாற்றுச் சிந்தனை

மாற்றுச் சிந்தனை

பள்ளியில் கற்றல் கற்பித்தலில் சிந்தனைத் திறன்களுக்கு முதன்மை அளிக்கப்பட்டு வரும் அதே வேளையில் குடும்பமும் மாற்றுச் சிந்தனைகளையும் ஆக்கச் சிந்தனைகளையும் வளர்க்க வேண்டும்.

Edward De Bono

தட்பவெப்ப பருவ மாற்றம், மாசு,பயங்கரவாதம் முதலியவற்றால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றிப் பேசும் அளவுக்குத்குத் தனி மனிதனின் சிந்தனை ஆற்றலின் வளர்ச்சி பற்றியும் நாம் பேசத்தான் வேண்டும். பிள்ளைகளிடையே மாற்றுச் சிந்தனைகளையும் (Lateral Thinking) ஆக்கச் சிந்தனைகளையும் (Creative Thinking) வளர்ப்பதற்குத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பள்ளியில் கற்றல் கற்பித்தலில் சிந்தனைத் திறன்களுக்கு முதன்மை அளிக்கப்பட்டு வரும் அதே வேளையில் குடும்பமும் மாற்றுச் சிந்தனைகளையும் ஆக்கச் சிந்தனைகளையும் வளர்க்க வேண்டும். ”மாற்றுச் சிந்தனையின் சிற்பி” என்று சொல்லப்படும்  Edward De Bono மாற்றுச் சிந்தனைகளைத் திட்டமிட்டே வளர்க்க வேண்டுமென்கிறார். அதனைக் கருவில் அமைந்த திருவாகக் கருதிவிடக் கூடாது என்கிறார். பிள்ளைகள் அன்றாடச் சிக்கல்களை எதிர்நோக்கும் பொழுதெல்லாம் அவர்கள் மாற்றுச் சிந்தனை வழியில் அவற்றுக்குத் தீர்வு காண ஊக்குவிக்க வேண்டும்.

De Bono அடிக்கடி ஒரு கதையைச் சொல்லுவார். ஒருவர் பாதுகாப்பிற்காக ஒரு நாயை வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்த பிறகுதான் அந்த நாய் குரைக்காது என்பது அவருக்குத் தெரிய வந்தது. நீங்கள் அவராக இருந்தால் என்ன செய்வீர்கள். உங்கள் பதில் மாற்றுச் சிந்தனையைப் பரிந்துரைப்பதாக இருக்க வேண்டும்.  இந்தக் கதையை நான் மாற்றுச் சிந்தனையைப் பற்றிப் புரிந்து கொள்வதற்காகப் பல முறை பயிலரங்குகளில் பயன்படுத்தி இருக்கிறேன். பெரும்பாலான பரிந்துரைகளும் பதில்களும் வழக்கமாக நாம் சிந்திக்கும் முறையிலேயே அமைந்திருந்தன. அவற்றுள் சில பரிந்துரைகள்…

  1. நாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுதல். 
  2. ஏமாற்றி விற்றதற்காக விற்றவர் மீது வழக்கு தொடுத்தல்.
  3. நாய்க்குக் குரைக்க பயிற்சி அளித்தல்.

இப்படி நிறைய பதில்கள் வந்தன. நாம் இன்னமும் வழக்கச் சிந்தனையிலிருந்து வெளியே வரவில்லை என்பதை இந்தப் பதில்கள் காட்டின. De Bono அவர்கள் இந்த நாய்க் கதையில் தமக்குக் கிடைத்த ஒரு மாற்றுச் சிந்தனை பதிலை நம் முன் வைக்கிறார். வீட்டின் வேலிக் கதவில் ‘ஜாக்கிரதை குரைக்காத நாய்கள்’ எனும் அறிவிப்புதான் அது. இதுதான் மாற்றுச் சிந்தனை.மாற்றுச் சிந்தனைதான் ஆக்கச் சிந்தனைக்கு அடித்தளம். இந்த மாற்றுச் சிந்தனை இல்லாமல் இருந்திருந்தால் புதிய கண்டுபிடிப்புகள் வந்திருக்கா. மாடிப் படிகளுக்குப் பதில் எஸ்கேலேட்டர், மின் தூக்கி வந்திருக்காது. கம்பி தொலைபேசிக்குப் பதிலாகக் கம்பி இல்லாத் தொலைபேசி வந்திருக்காது. ஏர் ஆசியா தோன்றிருக்காது. THR ராகா வந்திருக்காது. அடுத்தாண்டு தொடங்கி கறுப்பு நிற காலணிகளை மாணவர்கள் அணியலாம் எனும் உத்தரவும் பிறந்திருக்காது.

வணிக நிறுவனங்கள் தம் சந்தையை விரிவு படுத்துவதற்குப் ‘பெட்டி எல்லை சிந்தனையை விட்டு வெளியேறி’ (Out side the box) புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றன. அஜினோமோட்டோ தன் விற்பனையைப் பெருக்க, கலன்களின் தூவும் துவாரங்களைத் பெரியதாக்கின. அதனால் அஜினோ மோட்டோ சீக்கிரம் தீர்ந்தது. விற்பனை பெருகியது. இது மாற்றுச் சிந்தனை வழி கிடைத்த பரிந்துரையால் ஏற்பட்டது. நாம் எதிர்நோக்கும் ஒவ்வோரு சிக்கலைத் தீர்க்க மாற்றுச் சிந்தனையைப் பயன்படுத்த நம் பிள்ளைகளைப் பழக்குவோம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம். மறந்து விடாதீர்கள்!

பயன்படுத்தக்கூடிய 3 எளியமுறைகள்

  • பள்ளியில் மட்டுமன்று வீட்டிலும் மாற்றுச் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க வேண்டும்.  
  • மாற்றுச் சிந்தனையை கருவில் அமைந்த  திருவாகக் அதைத் கருதிவிடாமல் திட்டமிட்டே வளர்க்க வேண்டும்.
  • மாற்றுச் சிந்தனைச் சிற்பியாகிய (Edward De Bono)  எட்வர்ட் டி போனோவின் சிந்தனைக் கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களிடையே மாற்றுச் சிந்தனையை வார்த்தெடுக்கலாம்.

எ.சகாதேவன்

கட்டுரையாளர் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் தலைமை அமைப்பாளர். பயிற்றல், பள்ளி மேலாண்மைத் துறைகளில் நூற்றுக்கணக்கான பயிலரங்குகளை நடத்தியவர்.

Share this post

Leave a Reply