யு.பி.எஸ்.ஆர்.தேர்வு நெருங்கி விட்டதா? இதோ சில ஆலோசனைகள்

யு.பி.எஸ்.ஆர்.தேர்வு நெருங்கி விட்டதா? இதோ சில ஆலோசனைகள்

மாணவர்களுக்கு தேர்வுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருப்பதால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்…..

ஆங்கிலத்தில் drilling எனவும், மலாய்மொழியில் latih tubi எனவும், தமிழில் “மீள்திறன் பயிற்சிகள் செய்தல்” எனவும் குறிப்பிடலாம். நான் இந்த மீள்திறன் பயிற்சியை, செய்த பயிற்சியையே திரும்பத் திரும்பச் செய்யும் பயிற்சி என்பேன்..

குறிப்பாக, கடந்தாண்டுகளில் வெளிவந்த நிஜக் கேள்விகளையும் – கேள்வித்தாள்களையும் நிஜக் கேள்விகள் போலவே தயாரிக்கப்பட்டு இந்தாண்டுத் தேர்வில் இப்படி எல்லாம் கேள்விகள் வெளிவரலாம் அல்லது கேள்விகள் கேட்கப்படலாம் என்று அனுமானிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் தொகுப்புகளையும் செய்து பார்த்தலாகும்! அதிலும் குறிப்பாக, கடந்தாண்டுகளில் தேர்வில் வெளியாக்கப்பட்டு விட்ட கணிதம் மற்றும் அறிவியல் கேள்விகளை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதுவும் 100 புள்ளிகள் கிடைக்கும் வரைக்கும் மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதுவும் இந்தக் கடைசி நேரத்தில் மிகுந்த பலன் தரக்கூடிய ஒரு செயலாகும்!

ஏனெனில், இதர மொழிசார்ந்த கேள்வித்தாள்களை விட ஆண்டுதோறும் இவ்விரு கேள்வித்தாள்களில் கேட்கப்படும் கேள்விகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்! இவ்விரு கேள்வித்தாள்களில் தாம் (சிறுசிறு மாற்றங்களோடு) வந்த கேள்விகளே திரும்பத் திரும்ப வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமுள்ளன! ஏனைய பாடங்கள் போலல்லாமல் இவ்விரு கேள்வித்தாள்களின் அமைப்பானது தலைப்புகள் மற்றும் பொருளடக்கங்களை (topics & facts) அடிப்படையாகக் கொண்டது. எனவே, அப்பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டு விட்ட தலைப்பு மற்றும் பொருளடக்கங்களுக்குள்ளாகவே தாம் கேள்விகளைக் கேட்க முடியும்… ஒரே தலைப்பில் மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேள்விகள் கேட்டாலும் அதே கேள்வியைத்தான் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்க இயலும்… ஒரே தலைப்பைச் சோதிக்க,ஒரே விதமான (மதிப்பீட்டுக்) கருவியைத்தான் பயன்படுத்த இயலும்! நீளத்தை அளக்க மீட்டரைத்தான் பயன்படுத்த முடியும் என்பது போல… இங்கு ‘நீளம்’ தான் தலைப்பு, ‘மீட்டர்’ தான் கருவியாகும்.

இவற்றை ஏற்கெனவே, வகுப்பறைகளிலும் தேர்வு முகாம்களிலும் மீள்பார்வையாகச் செய்திருந்தாலும் பாதகமில்லை. மீண்டும் ஓரிருமுறை செய்து பார்க்கவும். அதுவும் நிஜத் தேர்வுத்தாளைச் செய்வது போன்றே அந்தந்தத் தாளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள்ளாகவே செய்து முடிக்கப் பார்க்கவேண்டும்!

செய்து முடித்த கேள்வித்தாள்களுக்கான மதிப்பீட்டையும் திருத்தும் பணியையும் நீங்களே பார்த்துக் கொண்டு அல்லது யாரிடமாவது கொடுத்துத் திருத்தி எத்தனை கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுக்க முடிந்தது என்று பார்த்து, உங்களின் நிலையை அதாவது தயார்நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள்! சரியாகப் பதில் கொடுக்காத அல்லது பதில் தெரியாத கேள்விகளுக்கு அல்லது பிழை வாங்கிய கேள்விகளுக்கு என்ன சரியான பதில் வரும் என்பதைப் பாடப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தோ பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் கேட்டுப் பார்த்தோ தெரிந்து கொண்டு மனத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்! மறபடியும் செய்து பார்க்கும்போது, இப்படி மனத்தில் போட்டு வைத்துக்கொண்ட அல்லது மனனம் செய்து வைத்துக் கொண்ட விடையைக் கொண்டு சரி வாங்கிவிட வேண்டும்..

தேர்வு நாள் நெருங்கிவிட்ட இந்தக் கடைசி நேரத்தில் 8 கேள்வித் தாளுக்கான 5 பாடங்களை (தமிழ், மலாய், ஆங்கிலம், அறிவியல், கணிதம்) நீங்கள் படித்துக் கொண்டிருக்கக் கூடாது! தேர்வுக்குப் படிக்கிற காலம் இல்லை இது! படிக்கிற காலம் சென்ற மாதத்தோடு முடிந்திருக்க வேண்டும்! இந்த மாதம் தொடங்கி மீள்திறன் பயிற்சிகளை (drilling @ latih tubi) மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டிய காலம் இது! தீவிர இப்பயிற்சியின் ஊடே படிக்காமல் விட்டதையும் படிக்க மறந்ததையும் படிக்க வேண்டியதையும் படித்துக் கொள்ளும் நேரம் இது! இக்கட்டான இக்காலக் கட்டத்தில் பாடப்புத்தகங்களையோ பாடக்குறிப்புகளையோ படிக்க முற்படுவது வீணான காரியம்!!

8 தாள்களுக்கும் சேர்த்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மாதிரிக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது ஒன்றே உங்கள் மூச்சாகவும் முயற்சியாகவும் பயிற்சியாகவும் இருக்க வேண்டிய நேரம் இது!

உணவு நேரம் போக, உறங்கும் நேரம் போக… கொஞ்ச விளையாட்டு, கொஞ்ச மனமகிழ்வு நடவடிக்கை நேரம் போக மற்ற எல்லா நேரமும் ‘செட்டு செட்டாக’ (sets) மாதிரி கேள்வித்தாள்களைச் செய்து கொண்டிருப்பது மட்டும் தான் உங்கள் ஒரே வேலையாக இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான், தேர்வுக்கு முழுவதுமான தயார்நிலையில் நீங்கள் இருப்பீர்கள். அப்பொழுதுதான் தேர்வை எதிர்கொள்ளும் அன்று எவ்வித அதிர்ச்சியும் ஏமாற்றமும் கொள்ளாமல் தன்னம்பிக்கையான தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்! தேர்வைக் கண்டு நீங்கள் அஞ்சமாட்டீர்கள்.. மாறாகத் தேர்வுதான் உங்களைக் கண்டு அஞ்சி நின்று உங்களுக்கு அடிபணிந்து  அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையில் வரும் பூதத்தைப் போல உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுத் தந்து உங்களை வெற்றி பெறச்செய்யும்! உங்களின் அற்புத விளக்கு எது தெரியுமா? மேற்சொல்லிய அந்த மீள்திறன் அதீதப் பயிற்சிதான்! (drilling & latihtubi)

பி.எம். மூர்த்தி

தலைமை ஆசிரியராகவும், இடைநிலைப்பள்ளி (POL) தமிழாசிரியராகவும், மலேசியத் தேர்வு வாரிய (LPM) தமிழ்ப்பிரிவுத் தலைவராகவும், உதவி இயக்குநராகவும், உலு லாஙாட் மாவட்ட கல்வி இலாகா (PPD) மொழி அதிகாரியாகவும், மலேசியக் கல்வி அமைச்சில் பல பதவிகள் வகித்தார்.

Share this post

Leave a Reply