நினைவாற்றலை உடனடியாக மேம்படுத்த ஓர் எளிய வழி

நினைவாற்றலை உடனடியாக மேம்படுத்த ஓர் எளிய வழி

15 நிமிடங்களில் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் வழி ஒன்றுள்ளது. அதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் செய்து மிகப்பெரிய பயனை அடைய முடியும்.

நமக்கு உடலியக்கப் பயிற்சிகள் தேவை. உடலியக்கப் பயிற்சிகள் நமது உடலாரோக்கியத்தை மட்டுமல்லாது அறிவு வளர்ச்சியையும் மேம்படுத்துகின்றன. எவ்வளவு நேரம் உடலியக்கப் பயிற்சியை நாம் மேற்கொண்டால், நமக்கு நன்மை ஏற்படும்? உடலியக்கப் பயிற்சியைச் செய்வதற்கு மிகப் பொருத்தமான நேரம் எது?

உடலியக்கப் பயிற்சிகள் சிந்தனையாற்றலை மேம்படுத்துகின்றனவா?
 

அண்மைய ஆய்வுகளில் ஒன்று (Haynes, Frith, Sng & Loprinzi, 2018) உடலியக்கப் பயிற்சிகளுக்கும் சிந்தனையாற்றலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை, அறிய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் பங்குபெற்ற ஒவ்வொருவரிடமும் கற்றல் தொடர்புடைய 4 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்வரும் அடிப்படைகளில் அந்த ஆய்வுகள் அவர்களிடம் நடத்தப்பட்டன.

  1. ஆய்வு 1 : 5 நிமிட ஓய்வுக்குப் பிறகு கற்றல் பயிற்சி செய்தல். 
  2. ஆய்வு 2 : 15 நிமிட உடலியக்கப் பயிற்சிக்குப் பிறகு கற்றல் பயிற்சி செய்தல்.
  3. ஆய்வு 3 : 15 நிமிட உடலியக்கப் பயிற்சியுடன் சேர்ந்து கற்றல் பயிற்சி செய்தல்.
  4. ஆய்வு 4 : கற்றல் பயிற்சியை முடித்த பிறகு, 15 நிமிட உடலியக்கப் பயிற்சி செய்தல். (உடலியக்கப் பயிற்சிக்கு மெதுவோட்டம் போதுமானதாகும்.)

கற்றல் நடவடிக்கைக்குப் பிறகு, ஆய்வில் பங்குபெற்றோர் அனைவரும் 20 நிமிடங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இடையோட்டமாகப் பார்த்தனர். அதன் பிறகு அவர்களின் நினைவில் இருக்கும் கற்றல் பகுதிகள் மீண்டும் சோதிக்கப்பட்டன.

நினைவாற்றல் மீது உடலியக்கம் ஏற்படுத்தும் விளைவு

இந்த நான்கு ஆய்வுகளில் கண்டறியப்பட்ட முடிவுகள்.

ஆய்வு 1–இல் பங்கெடுத்து அதில் கிடைத்த நினைவாற்றல் நிலையைவிட ஆய்வு 2, ஆய்வு 3, ஆய்வு 4 ஆகியவற்றில் பெற்ற நினைவாற்றல் நிலை மேம்பட்டதாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஆய்வு 2–ஐ அவர்கள் செய்தபோது (உடலியக்கப் பயிற்சிக்குப் பின்னர் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ளுதல்), அவர்களின் நினைவாற்றல் நிலை மேலும் சிறப்புடையதாக இருந்தது.

இந்தப் பயிற்சியை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்?

ஒன்றைக் கற்றுக்கொள்ளும் முன்பு, நாம் எளிய உடலியக்கப் பயிற்சிகளை 15 நிமிடங்கள் பயக்கும் என ஆய்வு பரிந்துரைத்துள்ளது. அதைப் பின்பற்றிக் கொள்ளவேண்டும். 

சிவா சோதிநாதன்

உமா பதிப்பகத்தின் மேலாளர்.  கல்வி, சுய வளர்ச்சி, உளவியல், தத்துவம், இசை ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.

Share this post

Leave a Reply