தேர்வில் நேரத்தின் வெற்றிப்படி!

தேர்வில் நேரத்தின் வெற்றிப்படி!

தேர்வு நாள்  மாணவர்களின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான நாளாகும். இந்த நாளை, சாதனை நாளாக மாற்றுவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. தேர்வு நேரத்தில் ஏற்படக்கூடிய தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் தவிர்க்க சில வழிகள்:

  • தேர்வுக்கு முதல்நாளே, தேர்வுக்குரிய அனைத்துப் பொருள்களையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  • தேர்வுக்கு முதல்நாள் இரவு சீக்கிரம் உறங்கி மறுநாள் காலையி்ல் சீக்கிரமாகப் பள்ளிக்குச் செல்லுங்கள். பெற்றோரின் ஆசிரைப் பெற்றுச் செல்லுங்கள்.
  • சக நண்பர்களுடன் கடைசி நேரத்தில் கேள்விகள் குறித்து விவாதம் செய்ய வேண்டாம்; தெளிவான மனநிலையுடன் தேர்வு அறைக்குச் செல்லுங்கள்.
  • வினாத்தாளைத் திறந்ததும் அவசர அவசரமாகப் படிக்காமல், வினாக்களை மிக நிதானமாக வாசியுங்கள்.
  • வினாக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புச் சொற்களை மிகச் சரியாக அடையாளம் காணுங்கள்.
  • புறவயக் கேள்விகளுக்கு (Soalan objektif) விடையளிக்கும்போது, தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடையளித்து விடுங்கள்.
  • கடினமான கேள்விக்கு நேரம் கூடுதலாகத் தேவைப்படும். எளிய கேள்விகளுக்கு விரைவாக விடையைக் கண்டுபிடித்து நேரத்தைச் சிக்கனப்படுத்தி, அந்த நேரத்தைக் கடினமான கேள்விக்குப் பதிலளிக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  • தேர்வுத் தாளில், சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு நேரம் (கால அளவு) பரந்துரை செய்யப்பட்டிருக்கும். அதைப் பின்பற்றுவது நலம் பயக்கும்.
  • அகவயக் கேள்விகள் (Soalan subjektif) குறிப்பாகத் தமிழ்மொழி, மலாய்மொழி, ஆங்கிலமொழி, அறிவியல், கணிதம் ஆகியவற்றுக்கு விடையளிக்கும்போது மிகுந்த சிரத்தையோடு வினாக்களை ஆராயுங்கள்.
  • கட்டுரைப் பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகள் இருப்பதால், முதல் கேள்விக்குப் பதில் அளித்திடு முன்பு மற்ற தலைப்புகளையும் நன்கு ஆராய்ந்திடுங்கள். உங்களால் மிகச் சிறப்பாக விடையளிக்கும் கேள்வி அடுத்ததாக இருக்கக்கூடும்.
  • விடைத்தாளை அனுப்புவதற்கு முன்னர், எழுதிய விடைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு குறிப்பிட்ட தேர்வு முடிந்ததும், அதைப் பற்றிப் பேசி நேரத்தைச் செலவழிக்க வேண்டாம். அடுத்த நாள் எழுதவிருக்கும் தேர்வைக் குறித்து உங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்துங்கள்.
  • தேர்வுக்காக நீங்கள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் சிறு குறிப்புகளைக் கொண்டு மீள்பார்வை செய்யுங்கள். கடைசி நேரத்தில் நீங்கள் படித்த ஒரு பகுதி தேர்வுக்கு வந்தாலும் நன்மைதானே! சிறு துரும்பும் பல் குத்த உதவும்! மறந்து விடாதீர்கள்.

டேவிட் தா. ஆரோக்கியம்

துணை ஆசிரியர் (மயில்), பாடநூல் பதிப்பாசிரியர்

Share this post

Leave a Reply